Tuesday, April 22, 2008

Forbidden Kingdom –ஜெட்லீ-ஜாக்கிசான்



ஜெட்-லீ யும் ஜாக்கி யும் சேர்ந்து நடித்திருக்கும் படம் Forbidden Kingdom , இத்தனை வருடங்கள் கழித்து இரண்டு மார்ஷல் ஆர்ட்ஸ் ஜாம்பவான்களும் கை கோர்த்திருக்கிறார்கள் ஒரு ஹாலிவுட் படத்தில் . Once upon a time in China அல்லது Crouching Tiger Hidden Dragon போல அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய சீரியஸான படமாக இருக்கும் என்று பார்த்தால் கொஞ்சம் நகைச்சுவை கலந்த மற்றுமொறு Hollywood flick என்ற ரீதியில் படம் இருக்கிறது .
படத்தில் Michael Angarano என்ற இளைஞன் தான் நாயகன் ,
Jason (Michael ) குங்-பூ படங்களை டிவிடியில் விரும்பிப் பார்க்கும் ஒரு இளைஞன், அவன் ஒரு சீன தாத்தாவின் ( Jackie chan ) கடையில் டிவிடி வாங்கும் வழக்கம் உள்ளவன், ஒரு நாள் ஒரு ரவுடி கூட்டம் அவன் உதவியுடன் அந்த தாத்தாவின் கடைக்குள் நுழைந்து பணத்தை கொள்ளை அடிக்க யத்தனிக்கின்றனர், தாத்தாவையும் சுட்டுவிடுகின்றனர், அவர் Jason-யிடம் staff (ஈட்டி) ஒன்றை கொடுத்து அதை உரியவர் இடத்தில் சேர்க்குமாறு கூறுகிறார். அந்த கூட்டத்திடமிருந்து தப்பித்து அந்த ஈட்டியுடம் ஓடுகிறான் Jason, அப்பொழுது ஒரு கட்டிடத்தின் உச்சியில் இருந்து விழுகிறான், அவன் எழும் பொழுது பண்டைய சீனாவில் ஒரு கிராமத்தில் இருக்கிறான் , அந்த கிராமத்தை ஒரு படை சூறையாடுகிறது, அப்பொழுது Jason-ஐ பார்த்து இந்த ஈட்டி உன் கையில் எப்படி வந்தது என கேட்டு அவனை கொல்ல முற்படுகிறார்கள் வீரர்கள், அப்பொழுது அவனை காப்பாற்றுகிறார் Drunken Immortal ( மீண்டும் ஜாக்கிசான் ) , மேலும் அவனை ஒரு தேநீர் கடைக்கு கூட்டிக் கொண்டு போகிறார் , அவன் தான் வேறு காலத்தில் இருந்து இந்த ஈட்டியை உரியவரிடத்தில் சேர்க்க வந்திருப்பதாக் சொல்கிறான் , அதற்கு ஜாக்கி ,ஒரு prophecy இருப்பதாகவும் அதில் ஒருவன் அந்த ஈட்டியை அதற்கு உரியவரான Monkey King ( ஜெட்-லீ ) யிடம் கொடுக்கப் போவதாகவும் சொல்கிறார். மிகப் புராதாண காலத்தில் மங்கி கிங் என்ற அரசன் ஒரு மந்திர ஈட்டியின் துணையால் பல தேசத்து படைகளை தனி ஆளாக சமாளிக்கிறார், அவரை ஒழித்துக் கட்ட Jade Warlord என்ற அரசன் அவரை சண்டைக்கு கூப்பிடுகிறான், அவரின் ஈட்டி இருக்கும் வரை அவரை கொல்லமுடியாது என்று கண்டுபிடிக்கிறான், ஆயுதம் இல்லாமல் அவரை சண்டைக்கு அழைக்கிறான், அவரும் அந்த ஈட்டியை வீசி எறிகிறார், அவர் எரிந்த மறு வினாடி தனது மந்திர சக்தி மூலம் அவரை சிலையாக்கிவிடுகிறான். இப்பொழுது அந்த ஈட்டியை அவன் அரண்மனையில் இருக்கும் அந்த மங்கி கிங்-ன் சிலையில் வைத்தால் அவர் உயிர்த்தெழுவார் என்று ஜாக்கி கூறுகிறார்.
Jason-யிடம் இருந்து அந்த ஈட்டியை Silent Monk ( மீண்டும் ஜெட்-லீ ) திருடிக் கொண்டு போகிறார், அவருடன் சண்டையிடும் ஜாக்கி பின் அவரும் அந்த ஈட்டியை மங்கி கிங் உயிர்த்தெழ வேண்டி களவாடியிருப்பதை அறிந்து கொண்டு அவருடன் கூட்டு சேர்ந்து jasonக்கு குங்-பூ சொல்லிக் கொடுக்கிறார். Jason அந்த ஈட்டியை கடைசியில் மங்கி கிங்-ன் சிலையில் வைத்து அவரை உயிர்த்தெழ செய்கிறார், பின் தன் காலத்திற்கு திரும்புகிறார்.


இந்த படத்தின் கதையை ஜாக்கி சானிடம் சொன்ன பொழுது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம், ஜெட்லீ நடிக்கிறார் என்ற காரணத்திற்க்காக ஒத்துக் கொண்டாராம், படத்தின் இயக்குனர் Lion King என்ற அனிமேஷன் படத்தை இயக்கியவர்!, அதனால் படத்தில் fantasy அதிகமிருக்கிறது , மேலும் ஜாக்கி சானையும் ஜெட்லியையும் மக்கள் எப்படி பார்க்க விரும்புவார்களோ அப்படியே காட்டியிருக்கிறார்கள் , குடித்துக் கொண்டே சண்டையிடும் Drunken Immortal ஆக ஜாக்கி , மிகக் குறைவாக பேசும் Silent Monk ஆக ஜெட்லீ என்று அவர்கள் தோற்றத்திலும் பேச்சிலும் அதே பழைய ஸ்டைல். Jasonக்கு இருவரும் குங்-பூ சொல்லிக் கொடுக்கும் காட்சி நகைச்சுவையாக படமாக்கப்பட்டிருக்கிறது, அங்கங்கே நகைச்சுவை இருந்தாலும் படத்தில் ஜாக்கியின் அதிரடி நகைச்சுவை சண்டை காட்சிகள் சற்று கம்மிதான், இரண்டு ஜாம்பவான்கள் இணையும் பொழுது அவர்களை மையப்படுத்தி ஒரு அதிரடிப் படமாகக் கொடுத்திருக்கலாம், ஒரு அமேரிக்கரை நாயகனாக்கி அவரை மையப் படுத்தி கதை நகருவதால் படத்தில் எதிர்பார்த்த அந்த டச் இல்லை . ஜாக்கிக்காக ஒரு முறை பார்க்கலாம் .

Tuesday, April 1, 2008

மெகாசீரியல் எனும் சாபக்கேடு !

குடி, போதை மருந்து, புகை போல இதுவும் ஒரு வகை கெட்ட பழக்கம் என்பதும், உடல் ரீதியாக இல்லாவிடினும் மன ரீதியாக பல பாதிப்புகளை இது ஏற்படுத்தும் என்றும் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் மெகாசீரியல் எனும் சைலண்ட் கில்லரை யாராலும் ஒழிக்க முடியாது என்றே தோன்றுகிறது, காரணம், குடி , போதை ,புகை போன்றவை கெட்ட பழக்கங்கள் என்பது சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் எல்லா நாடுகளிலும் ,எல்லா மக்களிடத்திலும் இன்று வேறுன்றிவிட்டது ( ஆனாலும் இன்னும் முழுதாக அவைகளை ஒழிக்க முடியவில்லை! ) . மெகாசீரியல் பார்ப்பது என்பது ஒரு கெட்ட பழக்கம் என்று ஏற்றுக் கொள்ளக் கூட இன்று யாரும் தயாராய் இல்லை. தவறு செய்பவன் குறைந்தபட்சம் தான் செய்வது தவறு என்பது தெரிந்தால்தான் அவனுக்கு யாராவது உபதேசம் செய்தால் காது கொடுத்து கேட்பான், அப்படி இருக்க இன்று தங்கள் நேரங்களையும் மனதையும் வீணாக்குபவர்களிடத்தில் இதைப் பற்றி பேச ஆரம்பித்தால் ஒன்று எங்கள் சுதந்திரத்தில் தலையிட உனக்கு என்ன உரிமை என்று தர்க்கம் பேசுவார்கள் அல்லது அந்த பழக்கம் ஒன்றும் தவறல்ல என்று (பிடி)வாதம் செய்வார்கள் .
இப்படி பேசுவர்களின் மனநிலையை ஓர் அளவுக்கு புரிந்துவைத்துள்ளதனால், அவர்கள் என்ன கேள்விகள் கேட்பார்கள், என்ன விதத்தில் தர்க்கம் பண்ணுவார்கள் என்பதை ஒரு சின்ன ‘நீயா-நானா’ போல் கீழே கொடுத்துள்ளேன், உங்கள் தரப்பு வாதத்தையும் எதிர்பார்க்கிறேன்,

“எங்கள் free time-ல நாங்க டிவி பாக்குறோம் உனக்கு என்ன?”

“அதுக்கு நல்ல விஷயங்களா பாக்க வேண்டியதுதானே?”

“நீங்கள்ல்லாம் பாக்குற படங்களுக்கு இது எந்த விதத்துல குறச்சல், அது டைம் வேஸ்ட் இல்லையா?”

“நாங்க பாக்குற படங்கள் எல்லாம் மக்களுக்கு நல்ல விஷயங்கள தான் கொண்டு வந்து சேக்குதுன்னு சொல்லலை , இதுலையும் பாதிப்புகள் இருக்கு, வன்முறை , ஆபாசம், இப்படி நிறைய, ஆனா உங்க சீரியலவிட இதுல அப்படி ஒன்னும் பெரிய பாதிப்பில்ல, எல்லா படங்களும் தவறான பாதிப்ப ஏற்படுத்தல ,ஆனா எல்லா சீரியலும் அபாயகரமான பாதிப்புகள் ஏற்படுத்துது , ஸ்கூட்டர்ல இருந்து வர்ற புகைக்கும் பாக்ட்ரியில இருந்து வர்ற புகைக்கும் வித்தியாசம் இருக்கு “

“அப்படி என்ன பெரிய பாதிப்ப ஏற்படுத்துது?”

“சினிமா அப்படின்னா காசு செலவு பண்ணி (குறைந்த பட்சம் திருட்டு விசிடிக்கு காசு கொடுத்தாவது) பாக்க வேண்டியிருக்கு, ஆனா சீரியல் எந்த செலவும் வைக்கிறது இல்ல, அதுனால எல்லார் வீட்டிலும் பார்க்கப்படுது, ஒரு சினிமா எப்படி இருந்தாலும் மூணு மணி நேரத்துல முடிஞ்சிரும், ஆனா ஒரு சீரியல் எப்ப முடியும்னு யாருக்குமே தெரியாது, தயாரிப்பாளருக்கு காசு சம்பாதிச்சு கொடுக்கறதுக்காக ஒரு சீரியல் எத்தன வருஷத்துக்கும் தொடரும், எதாவது ஒரு பிரச்சனை, எதாவது ஒரு டிவிஸ்ட் இருந்துக்கிட்டே இருக்கும், ஒரு சீரியல பத்து நாள் பாக்காம அப்புறம் பாருங்க கதை தெளிவா புரியும் காரணம் கதை மந்த கதியில் நகரும் “

“எங்களுக்கு பொழுது போக வேணாமா?, எங்க டென்ஷனும் ஒர்க் பிரஷரும் எங்களுக்குதான் தெரியும் , அதுக்கு ஒரு வடிகால் வேணாமா?”

“சரி, பொழுது போக்க டிவிதான் வழியா?, புத்தகம் படிக்கலாம், எதாவது கத்துக்கலாம், இப்படி நிறைய, அந்த காலத்துல டிவி இல்லாம மக்கள் வாழ்ந்திருக்காங்கன்னு உங்களுக்கு தெரியும் , அப்படி டிவிதான் பாக்கனுன்னா Discovery ,History National Geography, இதெல்லாம் பாக்கலாமே”

“அப்படின்னா மெகாச்சீரியல் பாக்காதவன் எல்லாம் தங்கள் நேரங்கள இப்படி நல்லவிதமா செலவு பண்றாங்களா? யாரு காதுல் பூ சுத்துறீங்க?”

“எல்லாரும் தங்கள் நேரத்த நல்லவிதமா செலவு பண்றாங்கன்னு சொல்ல வர்றல, யாரும் உங்கள மாதிரி சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கலன்னு சொல்ல வர்றேன், உங்கள் நேரத்த மட்டும் இல்ல உங்க மனசையும் சிதைக்கறதுல இது பெரும் பங்கு வகிக்குது, ஒரு சுவாரஸ்யம் வர்றதுக்காக மிகைப்படுத்தப் பட்ட கதாப்பாதிரங்கள் ,கொடூரமான குணாதிசியங்கள் உள்ள வில்லிகள், பழிக்கு பழி, குடும்பத்துக்குள் குழி பறிப்பது , வீண் சண்டை , இப்படி நிறைய இருக்கு சீரியல்ல “

“அதெல்லாம் வெறும் சீரியல்ன்னு எங்களுக்கு தெரியும் , ஒரு ஜாக்கி சான் படத்த பாத்தா உடனே நீங்க போய் எல்லாரையும் பறந்து பறந்து அடிப்பீங்களா? “

“ குறிப்பிட்ட வயதை தாண்டியவர்களுக்கு வேணுன்ன்னா வித்தியாசப்படுத்தி புரிஞ்சுக்குற பக்குவம் இருக்கும், ஆனா குழந்தைகள் தங்கள் சுற்றமும், மக்களும் எப்படி பழகுறாங்களோ அதை அப்படியே உள்வாங்கி சரியா தவறா என்று பாகுபடுத்தி பாக்காமல் கடைபிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள், அதனால், எல்லவற்றையும் குதர்க்கமாக பார்ப்பது, புரளி பேசுவது, கத்தி பேசுவது என்று செயல்படுத்துவார்கள் ( 12-18 வயது உடைய குழந்தைகள் இப்படி நடப்பது இன்று கண்கூடாக தெரிகிறது ), பெற்றோர்கள் எவ்வழியோ பிள்ளைகள் அவ்வழி, நீங்கள் பார்த்தால் உங்கள் குழந்தையும் உங்களோடு உட்கார்ந்து பார்க்கும்”

இப்படி தர்க்கம் பண்ணினாலும் , “தூற்றுவோர்கள் தூற்றட்டும்” என்று ரிமோட்டை எடுத்து கோலங்கள், அரசி என்று வரிசையாக பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்,
வறுமையும் மெகாசீரியலும் நம் நாட்டின் சாபக்கேடுகள், இரண்டையும் ஒழிக்க முடியாது என்றே தோன்றுகிறது.

Monday, March 3, 2008

என் இனிய இயந்திரா - மீண்டும் ஜீனோ

நாவல்களை திரைப்படமாக எடுப்பது என்பது திரையுலகில் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சி, பொதுவாக அது நாவலின் தாக்கத்தை ஏற்படுத்தாமல், வணிக ரீதியிலான விஷயங்களை உள்ளடக்கி ஒரு மாதிரி உருப்பெற்று பல சமயங்களில் தோல்வியுற்று ( உம் :கரையெல்லாம் செண்பகப்பூ) கதாசிரியருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிவிட்ட மாதிரி, சில படங்கள் நாவலை அட்சரம் மாறாமல் பிரதிபலித்தாலும் தோல்வி அடையும் , நாவலை திரைப்படமாகுவதில் பல சிக்கல்கள், முதலில் நாவலில் உள்ள எல்லா விஷயங்களையும் படத்தில் சொல்ல முடியாது, (உதாரணத்திற்கு கதை மாந்தர்களின் எண்ண ஓட்டங்களையும் அது சார்ந்த காட்சிகளையும்), அதே போன்று சண்டை, பாடல்கள், இடைச் செருகலாக நகைச்சுவை இதை எங்கே வைப்பது என்ற சிக்கல், இப்படி இயக்குனர்கள் யோசிக்க காரணம் வர்த்தகம்!, இதெல்லாம் இருந்தால்தான் அது சினிமா என்ற பிம்பம் இருப்பதால்தான் எந்த நாவலும் சரிவர இன்னும் படமாக்கப்படவில்லை,
நாவலாசிரியரே படத்திற்காக தன் கதையை மாற்றி சமரசம் செய்வது சுஜாதா-ஷங்கர் விஷயத்தில் நடந்தேறியிருக்கிறது, பொதுவாக ஷங்கர் படத்திற்கு தனியாக சுஜாதா கதை வசனம் எழுதியிருந்தாலும், அவரின் "ஆ.." நாவலை படித்தவர்கள் அந்த நாவல் எப்படி "அன்னியனாக" உருவெடுத்திருக்கிறது என்பதை அறிவார்கள், அப்படி பார்க்கையில் அவரின் "என் இனிய இயந்திரா" எப்படி "இயந்திரா"வாக போகிறது என்பதை ஊகித்திருப்பார்கள்,

கதை எழுதியது எண்பதுகளில் என்பதால் ,அப்போதைக்கு என்ன என்ன அறிவியல் முன்னேற்றங்கள் இருந்தனவோ அதனை முன்னிருத்தி எழுதியிருக்கிறார் சுஜாதா, ஒரு வாரப் பத்திரிக்கைக்கு எழுதும் தொடர் என்பதால், ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு கொக்கி போடுகிறார், அடுத்து என்ன? என்று ஆவலுடன் எதிர்பார்க்க வைக்க இந்த யுத்தி கையாளப்பட்டிருக்கிறது, கதை 2027-ல் ஆரம்பிக்கிறது, கதை நடப்பது ' நவசென்னை' யில், ' நிலா' என்ற பெண்ணுடைய வீட்டிற்கு ஒருவன் அரசின் அனுமதியின் பேரில் குடி வருகிறான், பெயர் ரவி, அவனுடன் ஒரு இயந்திர நாய் , பெயர் 'ஜீனோ' , பார்ப்பத்ற்கு உயிருள்ள நாய் போல் இருந்தாலும் அது இயந்திரம், பொதுவாக இப்படிபட்ட நாய்கள் சில வேலைகள்தான் செய்யும், ஆனால் ரவி அதற்குள் சில மாற்றங்கள் செய்து பேச வைக்ககிறான், யோசிக்க வைக்கிறான், இப்படி போகும் கதையில் பல புது விஷயங்களை போகிற போக்கில் ' நம்பும்படி' சொல்லிக் கொண்டே போகிறார் கதையாசிரியர், ஆனால் பல இடங்களில் தெளிவான வர்ணனைகள் இல்லை, சம்பாஷணைகளும், டெக்ணிக்ல் சமாச்சாரங்களும் மாற்றி மாற்றி வருகினறன, வாரப் பத்திரிக்கைக்கு எழுதப்படும் கதை என்பதால் கொஞ்சம் வார்த்தை சிக்கனம் தெரிகிறது, ஆனாலும் சில இடங்கள் நன்றாக உள்ளது, ரோபட் கூட்டத்திற்க்கும் மனித கூட்டத்திற்க்கும் நடக்கும் சண்டை, மற்றும் ஜீனோவின் புத்தி கூர்மை, அறிவியல் விஷயங்களான ஹோலோகிராப் (ஜீன்ஸ்-ஸில் ஐஸ்வர்யாவை ஆட வைப்பாரே செந்தில் அந்த விஷயம்) , ஹுரிஸ்டிக்ஸ், ஜிபிஎஸ், லேசர் கன், லேசர் சூழப்பட்ட கைதிகள் அறை ( மிஷன் இம்பாசிபிலில் இருக்குமே கண்ணுக்கு தெரியாத அரண்!) , சோஷியல் செக்யூரிட்டி நம்பர்!, சென்ட்ரல் டேடாபேஸ், பாஸ்வர்ட் திருட்டு! , விவி திரை ( இப்பொழுது இருக்கும் எல்சிடி மாதிரி பெரிய திரை) ,காந்தக் கார், சூரிய ஒளியில் தன்னைத்தானே சார்ஜ் செய்து கொள்ளும் ஜீனோ, மனிதர்களுக்கு பணிவிடை செய்யும் ஜெனிடிக் ரோபோட்ஸ் ( பாதி மனிதன்-பாதி ரோபோ) இப்படி நிறைய ! , கதையில் நாயகி நிலாவிற்கு எல்லாவகையிலும் உதவி செய்து அவளை நாட்டின் ராணியாக்கிவிடுகிறது ஜினோ, இத்தோடு முதல் கதை முடிவடைகிறது, 'மீண்டும் ஜீனோ'-வில் ராணிக்கு வரும் ஆபத்துக்களில் இருந்து அவளை காப்பாற்றி கடைசியில் உயிர்விடுகிறது( அதாவது கரப்ட் ஆகி நின்றுவிடுகிறது) , அதன் செயல்பாடுகள் உள்ளடங்கிய டிஸ்க் கொளுத்தப்பட்டுவிடுவதால் உயிர்பிக்க முடியாமல் அதன் உடலை(!) ஒரு சமாதி கட்டி பாதுகாக்கிறார்கள் , பொதுமக்கள் அதனை வரிசையில் நின்று பார்க்கிறார்கள், அதில் இருவர் பேசிக் கொள்ளும்போது , நாட்டில் பிரச்சனை வந்தால் அது உயிர் பெறும் என்று சொல்வதோடு கதை முடிகிறது!.


சுஜாதா இந்த விஞ்ஞானக் கதையை அன்றே எழுதியதால் இப்பொழுது இருக்கும் சமாச்சாரங்களான செல்போன், இன்டெர்னெட், இமெயில், சாட் போன்ற விஷயங்கள் இல்லை, கண்டிப்பாக இப்பொழுது எழுதியிருக்கும் திரைக்கதையில் அதனை சேர்த்திருப்பார், கதை படிக்கும் போது எனக்கு 'ஐ-ரோபோட்', 'ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ்' போன்ற படங்கள் ஞாபகத்திற்கு வந்தன ,இதனை ரஜினியை வைத்து எப்படி எடுப்பார்களோ!, ஒரு வேளை ' நிலா' கதாபாத்திரத்தை டம்மி ஆக்கிவிட்டு ரஜினியும் நாயும் சேர்ந்து கொண்டு எதிரிகளை அழிப்பார்களோ!, அல்லது நாய் கதாப்பாத்திரத்தை எடுத்துவிட்டு ரஜினியே ரோபோ கதாப்பாத்திரத்திலும் நடிப்பார் ( எனக்கென்னவோ இதுதான் நடக்கும் என தோன்றுகிறது!).


எது எப்படியோ , தமிழிலும் ஒரு வழியாக விஞ்ஞானக் கதைகளை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள், எல்லாவற்றிலும் ஹாலிவுட்டைக் காப்பி அடிக்கும் கோலிவுட் இம்மாதிரி கதைகளை எடுக்க ஏன் இவ்வளவு லேட் பண்ணினார்கள்?, சொதப்பாமல் எடுத்தால் சரி!

Tuesday, February 5, 2008

ராம்போ 4 - ஒரு எச்சரிக்கை




சில்வஸ்டர் ஸ்டாலோன் இயக்கி நடித்திருக்கும் ராம்போ 4,ராம்போ படங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது குறைந்த பட்சம் ஸ்டாலோன் கையில் துப்பாக்கியுடனும், தலையில் ஒரு கட்டுடனும் இருக்கும் ஸ்டிக்கரையாவது பார்த்திருப்பீர்கள் ( நானும் அப்படிப்பட்ட ஸ்டிக்கர்களை வாங்கி ஒட்டியன் ) , ராம்போ ஒரு தனிமனித போராளி, எதையும் தனித்து நின்று சமாளிக்கும் திறன் உள்ளவன், ராம்போவின் முந்தைய படங்கள் மூன்றிலும் அவன் தனிமனிதனாக உலகத்தில் எங்காவது போராடி வெற்றிவாகை சூடுவான், முதலிரண்டு படங்களில் வியட்னாம் , அடுத்து ஆப்கானிஸ்தான்(!) இப்படி போர்ச் சூழலில் போராடும் தனி மனிதனான அவனுக்கு குடும்பமில்லை, சொந்த பந்தமில்லை, அவனது முழுக் கதையையும் அவனது போர்த் திறனையும் தெரிந்து கொள்ள நீங்கள் மூன்று படங்களையும் பார்க்க வேண்டும். நான்காவது கதையிலும் ராம்போவின் வீரதீர செயல்கள் அப்படியே வருகின்றன, அதே காட்டுச் சூழல் , தனிமனிதன் ராணுவத்தை எதிர்ப்பது என்று அப்படியே எல்லாம் மாறாமல் வருகின்றன, ஆனால் மற்ற படங்களைப் பார்த்துவிட்டு அதே எதிர்பார்ப்போடு நீங்கள் திரை அரங்கிற்குள் சென்றால் உங்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கும், மற்ற ராம்போ படங்களை விட ,ஏன் மற்ற எந்த படங்களையும்விட இந்த படத்தில் வன்முறை அதிகபட்சமாக உள்ளது, உடல்கள் சிதறுவது, தலை, கை கால் மற்ற உறுப்புக்கள் குண்டடிபட்டு சிதறுவது, பாலியல் வன்முறை மற்றும் வார்த்தைகளில் சொல்ல முடியாத கோரக் காட்சிகள் இடம் பெறுகின்றன, அதோடு கிராப்பிக்ஸ்-ன் உதவியால் இந்த வன்முறைக் காட்சிகள் இம்மி பிசகாமல் அப்படியே கண் முன் தெரிகிறது! , இப்படிப்பட்ட கோரக் காட்சிகளை படத்தின் முதற்பாதியில் வைத்தால் தான் , கடைசியில் ஸ்டாலோன் அந்த ராணுவத்தை துவம்சம் பண்ணும்போது பார்க்க திரில்லிங்காக இருக்கும் என்ற ‘லாஜிக்’ படம் எடுத்தவர்களுக்கு தோன்றியிருக்கக் கூடும் , அதற்காக சற்று அதிகமாக எல்லாவற்றையும் காட்டிவிட்டார்கள்!, அமேரிக்காவில் இதன் ரேட்டிங் -R-21 , இதன் நேரம் 1:33 , நான் பார்த்தது சிங்கப்பூரில், இங்கே இது -M-18 , இதன் நேரம் 1:15, அதாவது கிட்டத்தட்ட 15 நிமிட படம் வெட்டப்பட்டு வெளிவந்திருக்கிறது ,அப்படி வெட்டப்பட்டும் இளைஞனான என்னால் படத்தின் கோரக் காட்சிகளை கண் கொண்டு பார்க்க முடியவில்லை, இப்படிப்பட்ட கொடூரங்கள் நிகழத்தான் செய்கின்றன அதைத் தானே காட்டுகிறார்கள் , உனக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் பார்க்கிறாய்? என்று நீங்கள் கேட்கலாம், நான் சொல்லவந்தது, இப்படிப்பட்ட படங்கள் குழந்தைகளுக்காக அல்ல! , இந்தியா போன்ற நாடுகளில் A செர்ட்டிபிக்கட் கொடுக்கப் பட்டிருக்கும் படங்களை குழந்தைகள் பார்க்கக் கூடாது, ஆனால் பல அஞ்ஞானிகள் பெண்டு பிள்ளைகளோடு இப்படிப்பட்ட படங்களுக்கு வந்துவிடுகிறார்கள், ( இப்பொழுது வரும் பாதி தமிழ் படங்கள் A செர்டிபிக்கட்டோடு வருகின்றன, உதாரணத்திற்கு சூர்யா நடித்து சில வருடங்களுக்கு முன் வந்த ‘ஆறு’ திரைப்படம் A செர்டிபிக்கட் படம், ஆனால் அந்த படத்திற்கு ஒருவர் குழந்தைகளோடு வந்தார்!) இந்தியாவில் உள்ள திரையரங்க நிர்வாகங்களும் குழந்தைகளை அனுமதித்துவிடுகிறது அதன் தீமைகளை உணராமல்!, நமக்கும் சாதரணமாக தெரியும் சில காட்சிகள குழந்தைகளுக்கு வேறு வகையான பாதிப்புகளை உண்டாக்கும், அதனால் தமிழகத்தில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட படங்களுக்கு குழத்தைகளை கூட்டிக் சென்று தங்கள் பிள்ளைகளின் மனநலனை தாங்களே கெடுத்துக் கொள்கிறார்கள்!, தயவு செய்து உங்கள் குழந்தைகளை இப்படிப் பட்ட படங்களுக்கு கூட்டி செல்லாதீர்கள், நீங்கள் ஒரு A செர்டிபிக்கட் படத்தை பார்க்கும் போது யாராவது குழந்தைகளோடு வந்தால் அவர்களிடன் எடுத்துக் கூறுங்கள் , அவர்கள் தெரியாமல் கூட வந்திருக்கலாம், எல்லாரும் கேட்கவில்லை என்றாலும் ஒரு சிலராவது கேட்பார்கள்!, இன்றைய குழந்தைகள் நாளைய இளைஞர்கள்! அதனை ஞாபகம் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்! நன்றி!.

Tuesday, January 29, 2008

சிவாஜி படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்

சிவாஜி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள், அதை யூ-டியூபில் பார்த்தேன், உங்கள் பார்வைக்கு ,

Thursday, January 24, 2008

மதுரைக்கு போகாதடி – ரகுமான் அடித்த காப்பி

இன்றைக்கு பட்டி தொட்டியெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் “மதுரைக்கு போககதடி “ என்ற பாடல் எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கிறதை கவனித்தீர்களா? , ஏ.ஆர் . ரகுமான் கூட தேவா ,ராஜ்குமார் போல் அப்படியே பழைய பாடல்களை காப்பி அடிக்க ஆரம்பித்துவிட்டார், அதிலும் இந்த பாட்டு நாம் பல முறை கேட்ட பாட்டு ,நம் இளையராஜா இசையமத்து பாடிய பாட்டு, என்ன ரகுமான் முழு பாடலையும் காப்பி அடிக்காமல் முதல் இரண்டு வரிகளில் மட்டும் அந்த மெட்டை சுட்டுவிட்டிருக்கிறார், திடீரென்று இந்த பாடல் ஞாபகத்திற்கு வந்தது, பதிவிட்டுவிட்டேன்,
அந்த பாடல், ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ படத்தில் வரும் பாடலான,
‘சின்ன தம்பி பெரிய தம்பி,
இந்த தம்பி ரெண்டும் தங்க கம்பி’

அப்படியே கொஞ்சம் ரகுமான் பாடலில் இரண்டு வரிகளை பாடிப் பாருங்கள்,
‘மதுரைக்கு போகாதடி ,
தல ஆட்டாம பொம்ம நிக்கும்’

ரகுமான், நீங்கள் கூட அதே பழைய பல்லவிதானா?

<p><a href="undefined?e">undefined</a></p>

Monday, January 14, 2008

தாரே சமீன் பர்



அமீர்கான் இயக்குனராக பணியாற்றியிருக்கும் முதல் படம், இந்த படத்தைப் பற்றி இணையத்தில் வந்த விமர்சனங்கள் படிக்க முற்பட்ட போது அமீர்கானையும் படத்தையும் சற்றே மிகையாக பாராட்டி இருப்பதைப் பார்த்தேன், அப்படி என்ன இருக்கிறது இந்த படத்தில் என்று பார்க்க ஆரம்பித்தேன், படம் முடியும் தருவாயில் ,நம் நாட்டிலும் தரமான படைப்புகள் வர ஆரம்பித்திருப்பதை உணரமுடிந்தது, முதலில் சில வரிகள் இந்த படத்தைப் பார்க்காதவர்களுக்கு,
இந்த படத்தில் கதாநாயகி இல்லை.
இந்த படத்தில் சண்டைக்காட்சிகளும் , வன்முறையும் இல்லை.
இந்த படத்தில் இடைச் செருகல் நகைச்சுவை இல்லை.
இந்த படத்தில் சினிமாத்தனமான கதைப் போக்கு இல்லை.
ஒரு சிறுவனைப் பற்றிய யதார்த்தமான படம்.
பெயர் போடும் போது சிறுவனின் பெயரான “தர்ஷீல்” என்பதை முதலில் போட்டு பின் தன் பெயரை பின்னால் போடும் வித்தியாசமான படைப்பாளி அமீர்கான். சரியாக இடைவேளை வரும் பொழுதுதான் அமீர்கான் திரையில் தோன்றுகிறார் , அதுவரை சிறுவனின் வாழ்கையை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இன்றைய நவீன யுகத்தில் பிள்ளைகள் எவ்வாறு படிப்பிக்கப் படுகிறார்கள் என்பதை முழுவீச்சில் சொல்கிறார்கள், எல்லோருக்கும் தன் பிள்ளை முதல் மதிப்பெண் வாங்கி எல்லாவற்றிலும் முதலில் வர வேண்டும் என்ற ஆவல், இதனால் சராசரியாக ஒரு குழந்தை தன் குழந்தைத்தனாமான உலகத்தை விடுத்து இந்த போட்டி உலகத்தில் ஓட பழக்கப்படுத்தப்படுகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியிருக்கிறார்கள், படிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன வேலை என்று அவர்களை இந்த வாழ்கை ரேசில் ஓடும் “breed horse” போல் வளர்க்கிறார்கள் ( பந்தயத்தில் முதலில் வர வேண்டும் என்றால் “breed horse” வளர்க்க வேண்டியதுதானே? எதற்கு குழந்தைகளை வளர்க்கிறார்கள்? – இது அமீர் படத்தில் சொல்லும் வசனம்) . சிறுவனின் பெயர் “இஷான்” , அவனுக்கு 8 வயது , படிப்பது மூன்றாம் வகுப்பு இரண்டாம் ஆண்டு , சரியாக படிப்பு வராத , சராசரிக்கும் கீழ் உள்ள மக்கு குழந்தையாக இருக்கிறான், அவனுக்கு படிப்பு வராததற்கு காரணம் அவனுக்கு Dsylexia என்ற மன நோய், அதாவது சரியாக எழுத்துக்களை நியாயபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத ஒரு கோளாறு, தலை கீழாகவும் , வல இடமாகவும் எழுத்துக்களை எழுதுவான், மேலும் ஒரு வார்த்தைக்குரிய எழுத்துக்களை தப்பாகக்கூட நியாயகத்தில் வைத்துக் கொள்ள முடியாதவன், அதனால் பள்ளியில் எல்லா வகுப்புகளிலும் திட்டு , வெளியே முட்டி போட்டு நிற்கிறான், அவனுக்கு இந்த நோய் இருப்பது யாருக்குமே தெரியவில்லை, ஒரு நாள் வகுப்புக்கு வெளியே நிற்கும் போது பள்ளியைவிட்டு வெளியே சுற்றுகிறான், வீட்டில் தன் அண்ணனிடம் உண்மையைக் கூறி தனக்கு விடுப்புக் கடிதம் எழுதவைக்கிறான், இதனை அறியும் பெற்றோர் அவனை கோபித்துக் கொண்டு “boarding school”லில் சேர்த்து விடுகிறார்கள் , அங்கே அவனுக்கு மேலும் சோதனை, வீட்டை விட்டு பிரிந்த சோகத்தோடு புது இடத்தில் அவன் மேலும் துன்புறுத்தப்படுகிறான் ஆசிரியர்களால், ஒரு கட்டத்தில் யாரிடமும் பேசாத மௌனியாக மாறி நடைபிணம் போல் வாழ்கிறான், இந்த இக்கட்டான சூழலில் அவன் வகுப்புக்கு கலை ஆசானாக வருகிறார் அமீர்கான்,



அவர் ஒரு மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியில் வேலை பார்ப்பவர், தற்காலிகமாக இந்த பள்ளியில் சேர்கிறார், அங்கே முதல் வகுப்பில் எல்லா மாணாவர்களுக்கும் ஒரு காகிதம் கொடுத்து வரையச் சொல்கிறார், எல்லோரும் வரைய இஷான் மட்டும் அப்படியே வெறும் காகிதத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான், அவன் பெயரை அமீர் கேட்க அதற்கு கூட பதில் கூறாமல் உட்கார்ந்திருக்கிறான், அவனுக்கு ஏதோ பிரச்சனை என்று அமீருக்கு தோன்றுகிறது, பல வகுப்புகளில் அவன் முட்டி போட்டு வெளியே நிற்பதை பார்க்கிறார் அமீர்,அவனுக்கு என்ன பிரச்சனை என்று பரிசோதனை செய்வதற்காக அவனது வகுப்புப் நோட்டுப் புத்தகத்தை எடுத்து பார்க்கும் போது அவருக்கு புரிகிறது அது “Dsylexia” என்று , அவருக்கும் அந்த நோய் இருந்தது, உடனே அவனது வீட்டிற்கு சென்று அந்த நோயைப் பற்றி எடுத்துக் கூறுகிறார், ஆனால் அவன் வீட்டில் யாரும் அதை நம்பவில்லை, பின் அந்த பள்ளி தலைமை ஆசிரியரைப் பார்த்து இஷானின் பிரச்சனையைக் கூறி இனிமேல் அவன் பரிட்சையை வாய் மொழியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் , தான் அவனை குணப்படுத்துவதாகவும் கூறுகிறார், வகுப்பில் Dsylexia பற்றி சொல்கிறார் , அந்த நோயால் பீடிக்கப்பட்ட Walt Disney, Loenardo, Abhisek Bachhan, Edison போன்றோர்கள் பின்னாளில் பெரிய ஆட்களாக உருவானார்கள் என்று சொல்கிறார், அவனுக்கு எழுத்துக்களையும் , எண்களையும் எழுத சொல்லிக் கொடுக்கிறார், ஒரு ஓவியப் போட்டியை ஏற்பாடு செய்து மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் கலந்து கொள்ளுமாறு சொல்கிறார், இஷானும் கலந்து கொள்கிறான், அந்த போட்டியில் இரண்டு பேரின் ஓவியம் சிறந்ததாக இருந்ததாகவும் , ஒன்று மாணவனுடையது மற்றொன்று ஆசிரியருடையது என்றும் தலைமை ஆசிரியர் மேடையில் கூறுகிறார், அந்த ஆசிரியர் நிகும் ( அமீர் ) என்றும் , அவர் தோற்றுவிட்டார் என்றும் , ஜெயித்தது மாணாவனாகிய இஷான் என்றும் கூறுகிறார், ஒட்டு மொத்த பள்ளியும் ஆராவாரம் செய்ய கூச்ச்சத்துடன் மேடை ஏறி பரிசை வாங்க வருகிறான் இஷான், பரிசை வாங்கும் போது ஓடிச் சென்று அமீரைக் கட்டிக் கொண்டு அழுகிறான். பின் அந்த வருடம் சிறப்பாக தேர்ச்சி பெறுகிறான் , அவனை கூட்டிக்கொண்டு போக அவனது பெற்றோர் வருகின்றனர், ஒட்டு மொத்த பள்ளியும் அவனைப் பற்றி பெருமையாக சொல்கிறது, பெற்றோர்கள் அழுகிறார்கள் அமீருக்கு நன்றி சொல்ல முடியாமல் , இஷான் பெற்றோருடன் கிளம்பும் போது ஓடிச் சென்று அமீரைக் கட்டிக் கொள்வதோடு முடிகிறது படம்.

‘இந்த படத்தைப் பார்த்து அத்வானி அழுதார்’ என்று செய்தி வந்திருக்கிறது, உண்மையில் அந்த செய்தி தவறாக அச்சிடப் பட்டிருக்கிறது, இப்படி வந்திருக்க வேண்டும் , ‘இந்த படத்தைப் பார்த்து அத்வானியும் அழுதார்’ .
இந்த படத்தை பார்க்க ஹிந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது, கண்டிப்பாய் பல திரைப்பட விழாக்களில் பல விருதுகள் இந்த படத்திற்கு காத்திருக்கிறது, திரைப்படம் என்பதை வெறும் மசாலா கலந்த கலவையாக பாவிக்கும் நாட்டில் இப்படி ஒரு படம் வந்திருப்பது பெருமைக்குறிய விஷயம், கண்டிப்பாய் எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம், இல்லையில்லை திரைப்பாடம்.