Monday, January 14, 2008

தாரே சமீன் பர்



அமீர்கான் இயக்குனராக பணியாற்றியிருக்கும் முதல் படம், இந்த படத்தைப் பற்றி இணையத்தில் வந்த விமர்சனங்கள் படிக்க முற்பட்ட போது அமீர்கானையும் படத்தையும் சற்றே மிகையாக பாராட்டி இருப்பதைப் பார்த்தேன், அப்படி என்ன இருக்கிறது இந்த படத்தில் என்று பார்க்க ஆரம்பித்தேன், படம் முடியும் தருவாயில் ,நம் நாட்டிலும் தரமான படைப்புகள் வர ஆரம்பித்திருப்பதை உணரமுடிந்தது, முதலில் சில வரிகள் இந்த படத்தைப் பார்க்காதவர்களுக்கு,
இந்த படத்தில் கதாநாயகி இல்லை.
இந்த படத்தில் சண்டைக்காட்சிகளும் , வன்முறையும் இல்லை.
இந்த படத்தில் இடைச் செருகல் நகைச்சுவை இல்லை.
இந்த படத்தில் சினிமாத்தனமான கதைப் போக்கு இல்லை.
ஒரு சிறுவனைப் பற்றிய யதார்த்தமான படம்.
பெயர் போடும் போது சிறுவனின் பெயரான “தர்ஷீல்” என்பதை முதலில் போட்டு பின் தன் பெயரை பின்னால் போடும் வித்தியாசமான படைப்பாளி அமீர்கான். சரியாக இடைவேளை வரும் பொழுதுதான் அமீர்கான் திரையில் தோன்றுகிறார் , அதுவரை சிறுவனின் வாழ்கையை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இன்றைய நவீன யுகத்தில் பிள்ளைகள் எவ்வாறு படிப்பிக்கப் படுகிறார்கள் என்பதை முழுவீச்சில் சொல்கிறார்கள், எல்லோருக்கும் தன் பிள்ளை முதல் மதிப்பெண் வாங்கி எல்லாவற்றிலும் முதலில் வர வேண்டும் என்ற ஆவல், இதனால் சராசரியாக ஒரு குழந்தை தன் குழந்தைத்தனாமான உலகத்தை விடுத்து இந்த போட்டி உலகத்தில் ஓட பழக்கப்படுத்தப்படுகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியிருக்கிறார்கள், படிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன வேலை என்று அவர்களை இந்த வாழ்கை ரேசில் ஓடும் “breed horse” போல் வளர்க்கிறார்கள் ( பந்தயத்தில் முதலில் வர வேண்டும் என்றால் “breed horse” வளர்க்க வேண்டியதுதானே? எதற்கு குழந்தைகளை வளர்க்கிறார்கள்? – இது அமீர் படத்தில் சொல்லும் வசனம்) . சிறுவனின் பெயர் “இஷான்” , அவனுக்கு 8 வயது , படிப்பது மூன்றாம் வகுப்பு இரண்டாம் ஆண்டு , சரியாக படிப்பு வராத , சராசரிக்கும் கீழ் உள்ள மக்கு குழந்தையாக இருக்கிறான், அவனுக்கு படிப்பு வராததற்கு காரணம் அவனுக்கு Dsylexia என்ற மன நோய், அதாவது சரியாக எழுத்துக்களை நியாயபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத ஒரு கோளாறு, தலை கீழாகவும் , வல இடமாகவும் எழுத்துக்களை எழுதுவான், மேலும் ஒரு வார்த்தைக்குரிய எழுத்துக்களை தப்பாகக்கூட நியாயகத்தில் வைத்துக் கொள்ள முடியாதவன், அதனால் பள்ளியில் எல்லா வகுப்புகளிலும் திட்டு , வெளியே முட்டி போட்டு நிற்கிறான், அவனுக்கு இந்த நோய் இருப்பது யாருக்குமே தெரியவில்லை, ஒரு நாள் வகுப்புக்கு வெளியே நிற்கும் போது பள்ளியைவிட்டு வெளியே சுற்றுகிறான், வீட்டில் தன் அண்ணனிடம் உண்மையைக் கூறி தனக்கு விடுப்புக் கடிதம் எழுதவைக்கிறான், இதனை அறியும் பெற்றோர் அவனை கோபித்துக் கொண்டு “boarding school”லில் சேர்த்து விடுகிறார்கள் , அங்கே அவனுக்கு மேலும் சோதனை, வீட்டை விட்டு பிரிந்த சோகத்தோடு புது இடத்தில் அவன் மேலும் துன்புறுத்தப்படுகிறான் ஆசிரியர்களால், ஒரு கட்டத்தில் யாரிடமும் பேசாத மௌனியாக மாறி நடைபிணம் போல் வாழ்கிறான், இந்த இக்கட்டான சூழலில் அவன் வகுப்புக்கு கலை ஆசானாக வருகிறார் அமீர்கான்,



அவர் ஒரு மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியில் வேலை பார்ப்பவர், தற்காலிகமாக இந்த பள்ளியில் சேர்கிறார், அங்கே முதல் வகுப்பில் எல்லா மாணாவர்களுக்கும் ஒரு காகிதம் கொடுத்து வரையச் சொல்கிறார், எல்லோரும் வரைய இஷான் மட்டும் அப்படியே வெறும் காகிதத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான், அவன் பெயரை அமீர் கேட்க அதற்கு கூட பதில் கூறாமல் உட்கார்ந்திருக்கிறான், அவனுக்கு ஏதோ பிரச்சனை என்று அமீருக்கு தோன்றுகிறது, பல வகுப்புகளில் அவன் முட்டி போட்டு வெளியே நிற்பதை பார்க்கிறார் அமீர்,அவனுக்கு என்ன பிரச்சனை என்று பரிசோதனை செய்வதற்காக அவனது வகுப்புப் நோட்டுப் புத்தகத்தை எடுத்து பார்க்கும் போது அவருக்கு புரிகிறது அது “Dsylexia” என்று , அவருக்கும் அந்த நோய் இருந்தது, உடனே அவனது வீட்டிற்கு சென்று அந்த நோயைப் பற்றி எடுத்துக் கூறுகிறார், ஆனால் அவன் வீட்டில் யாரும் அதை நம்பவில்லை, பின் அந்த பள்ளி தலைமை ஆசிரியரைப் பார்த்து இஷானின் பிரச்சனையைக் கூறி இனிமேல் அவன் பரிட்சையை வாய் மொழியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் , தான் அவனை குணப்படுத்துவதாகவும் கூறுகிறார், வகுப்பில் Dsylexia பற்றி சொல்கிறார் , அந்த நோயால் பீடிக்கப்பட்ட Walt Disney, Loenardo, Abhisek Bachhan, Edison போன்றோர்கள் பின்னாளில் பெரிய ஆட்களாக உருவானார்கள் என்று சொல்கிறார், அவனுக்கு எழுத்துக்களையும் , எண்களையும் எழுத சொல்லிக் கொடுக்கிறார், ஒரு ஓவியப் போட்டியை ஏற்பாடு செய்து மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் கலந்து கொள்ளுமாறு சொல்கிறார், இஷானும் கலந்து கொள்கிறான், அந்த போட்டியில் இரண்டு பேரின் ஓவியம் சிறந்ததாக இருந்ததாகவும் , ஒன்று மாணவனுடையது மற்றொன்று ஆசிரியருடையது என்றும் தலைமை ஆசிரியர் மேடையில் கூறுகிறார், அந்த ஆசிரியர் நிகும் ( அமீர் ) என்றும் , அவர் தோற்றுவிட்டார் என்றும் , ஜெயித்தது மாணாவனாகிய இஷான் என்றும் கூறுகிறார், ஒட்டு மொத்த பள்ளியும் ஆராவாரம் செய்ய கூச்ச்சத்துடன் மேடை ஏறி பரிசை வாங்க வருகிறான் இஷான், பரிசை வாங்கும் போது ஓடிச் சென்று அமீரைக் கட்டிக் கொண்டு அழுகிறான். பின் அந்த வருடம் சிறப்பாக தேர்ச்சி பெறுகிறான் , அவனை கூட்டிக்கொண்டு போக அவனது பெற்றோர் வருகின்றனர், ஒட்டு மொத்த பள்ளியும் அவனைப் பற்றி பெருமையாக சொல்கிறது, பெற்றோர்கள் அழுகிறார்கள் அமீருக்கு நன்றி சொல்ல முடியாமல் , இஷான் பெற்றோருடன் கிளம்பும் போது ஓடிச் சென்று அமீரைக் கட்டிக் கொள்வதோடு முடிகிறது படம்.

‘இந்த படத்தைப் பார்த்து அத்வானி அழுதார்’ என்று செய்தி வந்திருக்கிறது, உண்மையில் அந்த செய்தி தவறாக அச்சிடப் பட்டிருக்கிறது, இப்படி வந்திருக்க வேண்டும் , ‘இந்த படத்தைப் பார்த்து அத்வானியும் அழுதார்’ .
இந்த படத்தை பார்க்க ஹிந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது, கண்டிப்பாய் பல திரைப்பட விழாக்களில் பல விருதுகள் இந்த படத்திற்கு காத்திருக்கிறது, திரைப்படம் என்பதை வெறும் மசாலா கலந்த கலவையாக பாவிக்கும் நாட்டில் இப்படி ஒரு படம் வந்திருப்பது பெருமைக்குறிய விஷயம், கண்டிப்பாய் எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம், இல்லையில்லை திரைப்பாடம்.

1 comment:

Anonymous said...

Nice review, hope the film does well in box office and be a trend setter in india .