Monday, March 3, 2008

என் இனிய இயந்திரா - மீண்டும் ஜீனோ

நாவல்களை திரைப்படமாக எடுப்பது என்பது திரையுலகில் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சி, பொதுவாக அது நாவலின் தாக்கத்தை ஏற்படுத்தாமல், வணிக ரீதியிலான விஷயங்களை உள்ளடக்கி ஒரு மாதிரி உருப்பெற்று பல சமயங்களில் தோல்வியுற்று ( உம் :கரையெல்லாம் செண்பகப்பூ) கதாசிரியருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிவிட்ட மாதிரி, சில படங்கள் நாவலை அட்சரம் மாறாமல் பிரதிபலித்தாலும் தோல்வி அடையும் , நாவலை திரைப்படமாகுவதில் பல சிக்கல்கள், முதலில் நாவலில் உள்ள எல்லா விஷயங்களையும் படத்தில் சொல்ல முடியாது, (உதாரணத்திற்கு கதை மாந்தர்களின் எண்ண ஓட்டங்களையும் அது சார்ந்த காட்சிகளையும்), அதே போன்று சண்டை, பாடல்கள், இடைச் செருகலாக நகைச்சுவை இதை எங்கே வைப்பது என்ற சிக்கல், இப்படி இயக்குனர்கள் யோசிக்க காரணம் வர்த்தகம்!, இதெல்லாம் இருந்தால்தான் அது சினிமா என்ற பிம்பம் இருப்பதால்தான் எந்த நாவலும் சரிவர இன்னும் படமாக்கப்படவில்லை,
நாவலாசிரியரே படத்திற்காக தன் கதையை மாற்றி சமரசம் செய்வது சுஜாதா-ஷங்கர் விஷயத்தில் நடந்தேறியிருக்கிறது, பொதுவாக ஷங்கர் படத்திற்கு தனியாக சுஜாதா கதை வசனம் எழுதியிருந்தாலும், அவரின் "ஆ.." நாவலை படித்தவர்கள் அந்த நாவல் எப்படி "அன்னியனாக" உருவெடுத்திருக்கிறது என்பதை அறிவார்கள், அப்படி பார்க்கையில் அவரின் "என் இனிய இயந்திரா" எப்படி "இயந்திரா"வாக போகிறது என்பதை ஊகித்திருப்பார்கள்,

கதை எழுதியது எண்பதுகளில் என்பதால் ,அப்போதைக்கு என்ன என்ன அறிவியல் முன்னேற்றங்கள் இருந்தனவோ அதனை முன்னிருத்தி எழுதியிருக்கிறார் சுஜாதா, ஒரு வாரப் பத்திரிக்கைக்கு எழுதும் தொடர் என்பதால், ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு கொக்கி போடுகிறார், அடுத்து என்ன? என்று ஆவலுடன் எதிர்பார்க்க வைக்க இந்த யுத்தி கையாளப்பட்டிருக்கிறது, கதை 2027-ல் ஆரம்பிக்கிறது, கதை நடப்பது ' நவசென்னை' யில், ' நிலா' என்ற பெண்ணுடைய வீட்டிற்கு ஒருவன் அரசின் அனுமதியின் பேரில் குடி வருகிறான், பெயர் ரவி, அவனுடன் ஒரு இயந்திர நாய் , பெயர் 'ஜீனோ' , பார்ப்பத்ற்கு உயிருள்ள நாய் போல் இருந்தாலும் அது இயந்திரம், பொதுவாக இப்படிபட்ட நாய்கள் சில வேலைகள்தான் செய்யும், ஆனால் ரவி அதற்குள் சில மாற்றங்கள் செய்து பேச வைக்ககிறான், யோசிக்க வைக்கிறான், இப்படி போகும் கதையில் பல புது விஷயங்களை போகிற போக்கில் ' நம்பும்படி' சொல்லிக் கொண்டே போகிறார் கதையாசிரியர், ஆனால் பல இடங்களில் தெளிவான வர்ணனைகள் இல்லை, சம்பாஷணைகளும், டெக்ணிக்ல் சமாச்சாரங்களும் மாற்றி மாற்றி வருகினறன, வாரப் பத்திரிக்கைக்கு எழுதப்படும் கதை என்பதால் கொஞ்சம் வார்த்தை சிக்கனம் தெரிகிறது, ஆனாலும் சில இடங்கள் நன்றாக உள்ளது, ரோபட் கூட்டத்திற்க்கும் மனித கூட்டத்திற்க்கும் நடக்கும் சண்டை, மற்றும் ஜீனோவின் புத்தி கூர்மை, அறிவியல் விஷயங்களான ஹோலோகிராப் (ஜீன்ஸ்-ஸில் ஐஸ்வர்யாவை ஆட வைப்பாரே செந்தில் அந்த விஷயம்) , ஹுரிஸ்டிக்ஸ், ஜிபிஎஸ், லேசர் கன், லேசர் சூழப்பட்ட கைதிகள் அறை ( மிஷன் இம்பாசிபிலில் இருக்குமே கண்ணுக்கு தெரியாத அரண்!) , சோஷியல் செக்யூரிட்டி நம்பர்!, சென்ட்ரல் டேடாபேஸ், பாஸ்வர்ட் திருட்டு! , விவி திரை ( இப்பொழுது இருக்கும் எல்சிடி மாதிரி பெரிய திரை) ,காந்தக் கார், சூரிய ஒளியில் தன்னைத்தானே சார்ஜ் செய்து கொள்ளும் ஜீனோ, மனிதர்களுக்கு பணிவிடை செய்யும் ஜெனிடிக் ரோபோட்ஸ் ( பாதி மனிதன்-பாதி ரோபோ) இப்படி நிறைய ! , கதையில் நாயகி நிலாவிற்கு எல்லாவகையிலும் உதவி செய்து அவளை நாட்டின் ராணியாக்கிவிடுகிறது ஜினோ, இத்தோடு முதல் கதை முடிவடைகிறது, 'மீண்டும் ஜீனோ'-வில் ராணிக்கு வரும் ஆபத்துக்களில் இருந்து அவளை காப்பாற்றி கடைசியில் உயிர்விடுகிறது( அதாவது கரப்ட் ஆகி நின்றுவிடுகிறது) , அதன் செயல்பாடுகள் உள்ளடங்கிய டிஸ்க் கொளுத்தப்பட்டுவிடுவதால் உயிர்பிக்க முடியாமல் அதன் உடலை(!) ஒரு சமாதி கட்டி பாதுகாக்கிறார்கள் , பொதுமக்கள் அதனை வரிசையில் நின்று பார்க்கிறார்கள், அதில் இருவர் பேசிக் கொள்ளும்போது , நாட்டில் பிரச்சனை வந்தால் அது உயிர் பெறும் என்று சொல்வதோடு கதை முடிகிறது!.


சுஜாதா இந்த விஞ்ஞானக் கதையை அன்றே எழுதியதால் இப்பொழுது இருக்கும் சமாச்சாரங்களான செல்போன், இன்டெர்னெட், இமெயில், சாட் போன்ற விஷயங்கள் இல்லை, கண்டிப்பாக இப்பொழுது எழுதியிருக்கும் திரைக்கதையில் அதனை சேர்த்திருப்பார், கதை படிக்கும் போது எனக்கு 'ஐ-ரோபோட்', 'ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ்' போன்ற படங்கள் ஞாபகத்திற்கு வந்தன ,இதனை ரஜினியை வைத்து எப்படி எடுப்பார்களோ!, ஒரு வேளை ' நிலா' கதாபாத்திரத்தை டம்மி ஆக்கிவிட்டு ரஜினியும் நாயும் சேர்ந்து கொண்டு எதிரிகளை அழிப்பார்களோ!, அல்லது நாய் கதாப்பாத்திரத்தை எடுத்துவிட்டு ரஜினியே ரோபோ கதாப்பாத்திரத்திலும் நடிப்பார் ( எனக்கென்னவோ இதுதான் நடக்கும் என தோன்றுகிறது!).


எது எப்படியோ , தமிழிலும் ஒரு வழியாக விஞ்ஞானக் கதைகளை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள், எல்லாவற்றிலும் ஹாலிவுட்டைக் காப்பி அடிக்கும் கோலிவுட் இம்மாதிரி கதைகளை எடுக்க ஏன் இவ்வளவு லேட் பண்ணினார்கள்?, சொதப்பாமல் எடுத்தால் சரி!

No comments: