Tuesday, April 1, 2008

மெகாசீரியல் எனும் சாபக்கேடு !

குடி, போதை மருந்து, புகை போல இதுவும் ஒரு வகை கெட்ட பழக்கம் என்பதும், உடல் ரீதியாக இல்லாவிடினும் மன ரீதியாக பல பாதிப்புகளை இது ஏற்படுத்தும் என்றும் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் மெகாசீரியல் எனும் சைலண்ட் கில்லரை யாராலும் ஒழிக்க முடியாது என்றே தோன்றுகிறது, காரணம், குடி , போதை ,புகை போன்றவை கெட்ட பழக்கங்கள் என்பது சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் எல்லா நாடுகளிலும் ,எல்லா மக்களிடத்திலும் இன்று வேறுன்றிவிட்டது ( ஆனாலும் இன்னும் முழுதாக அவைகளை ஒழிக்க முடியவில்லை! ) . மெகாசீரியல் பார்ப்பது என்பது ஒரு கெட்ட பழக்கம் என்று ஏற்றுக் கொள்ளக் கூட இன்று யாரும் தயாராய் இல்லை. தவறு செய்பவன் குறைந்தபட்சம் தான் செய்வது தவறு என்பது தெரிந்தால்தான் அவனுக்கு யாராவது உபதேசம் செய்தால் காது கொடுத்து கேட்பான், அப்படி இருக்க இன்று தங்கள் நேரங்களையும் மனதையும் வீணாக்குபவர்களிடத்தில் இதைப் பற்றி பேச ஆரம்பித்தால் ஒன்று எங்கள் சுதந்திரத்தில் தலையிட உனக்கு என்ன உரிமை என்று தர்க்கம் பேசுவார்கள் அல்லது அந்த பழக்கம் ஒன்றும் தவறல்ல என்று (பிடி)வாதம் செய்வார்கள் .
இப்படி பேசுவர்களின் மனநிலையை ஓர் அளவுக்கு புரிந்துவைத்துள்ளதனால், அவர்கள் என்ன கேள்விகள் கேட்பார்கள், என்ன விதத்தில் தர்க்கம் பண்ணுவார்கள் என்பதை ஒரு சின்ன ‘நீயா-நானா’ போல் கீழே கொடுத்துள்ளேன், உங்கள் தரப்பு வாதத்தையும் எதிர்பார்க்கிறேன்,

“எங்கள் free time-ல நாங்க டிவி பாக்குறோம் உனக்கு என்ன?”

“அதுக்கு நல்ல விஷயங்களா பாக்க வேண்டியதுதானே?”

“நீங்கள்ல்லாம் பாக்குற படங்களுக்கு இது எந்த விதத்துல குறச்சல், அது டைம் வேஸ்ட் இல்லையா?”

“நாங்க பாக்குற படங்கள் எல்லாம் மக்களுக்கு நல்ல விஷயங்கள தான் கொண்டு வந்து சேக்குதுன்னு சொல்லலை , இதுலையும் பாதிப்புகள் இருக்கு, வன்முறை , ஆபாசம், இப்படி நிறைய, ஆனா உங்க சீரியலவிட இதுல அப்படி ஒன்னும் பெரிய பாதிப்பில்ல, எல்லா படங்களும் தவறான பாதிப்ப ஏற்படுத்தல ,ஆனா எல்லா சீரியலும் அபாயகரமான பாதிப்புகள் ஏற்படுத்துது , ஸ்கூட்டர்ல இருந்து வர்ற புகைக்கும் பாக்ட்ரியில இருந்து வர்ற புகைக்கும் வித்தியாசம் இருக்கு “

“அப்படி என்ன பெரிய பாதிப்ப ஏற்படுத்துது?”

“சினிமா அப்படின்னா காசு செலவு பண்ணி (குறைந்த பட்சம் திருட்டு விசிடிக்கு காசு கொடுத்தாவது) பாக்க வேண்டியிருக்கு, ஆனா சீரியல் எந்த செலவும் வைக்கிறது இல்ல, அதுனால எல்லார் வீட்டிலும் பார்க்கப்படுது, ஒரு சினிமா எப்படி இருந்தாலும் மூணு மணி நேரத்துல முடிஞ்சிரும், ஆனா ஒரு சீரியல் எப்ப முடியும்னு யாருக்குமே தெரியாது, தயாரிப்பாளருக்கு காசு சம்பாதிச்சு கொடுக்கறதுக்காக ஒரு சீரியல் எத்தன வருஷத்துக்கும் தொடரும், எதாவது ஒரு பிரச்சனை, எதாவது ஒரு டிவிஸ்ட் இருந்துக்கிட்டே இருக்கும், ஒரு சீரியல பத்து நாள் பாக்காம அப்புறம் பாருங்க கதை தெளிவா புரியும் காரணம் கதை மந்த கதியில் நகரும் “

“எங்களுக்கு பொழுது போக வேணாமா?, எங்க டென்ஷனும் ஒர்க் பிரஷரும் எங்களுக்குதான் தெரியும் , அதுக்கு ஒரு வடிகால் வேணாமா?”

“சரி, பொழுது போக்க டிவிதான் வழியா?, புத்தகம் படிக்கலாம், எதாவது கத்துக்கலாம், இப்படி நிறைய, அந்த காலத்துல டிவி இல்லாம மக்கள் வாழ்ந்திருக்காங்கன்னு உங்களுக்கு தெரியும் , அப்படி டிவிதான் பாக்கனுன்னா Discovery ,History National Geography, இதெல்லாம் பாக்கலாமே”

“அப்படின்னா மெகாச்சீரியல் பாக்காதவன் எல்லாம் தங்கள் நேரங்கள இப்படி நல்லவிதமா செலவு பண்றாங்களா? யாரு காதுல் பூ சுத்துறீங்க?”

“எல்லாரும் தங்கள் நேரத்த நல்லவிதமா செலவு பண்றாங்கன்னு சொல்ல வர்றல, யாரும் உங்கள மாதிரி சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கலன்னு சொல்ல வர்றேன், உங்கள் நேரத்த மட்டும் இல்ல உங்க மனசையும் சிதைக்கறதுல இது பெரும் பங்கு வகிக்குது, ஒரு சுவாரஸ்யம் வர்றதுக்காக மிகைப்படுத்தப் பட்ட கதாப்பாதிரங்கள் ,கொடூரமான குணாதிசியங்கள் உள்ள வில்லிகள், பழிக்கு பழி, குடும்பத்துக்குள் குழி பறிப்பது , வீண் சண்டை , இப்படி நிறைய இருக்கு சீரியல்ல “

“அதெல்லாம் வெறும் சீரியல்ன்னு எங்களுக்கு தெரியும் , ஒரு ஜாக்கி சான் படத்த பாத்தா உடனே நீங்க போய் எல்லாரையும் பறந்து பறந்து அடிப்பீங்களா? “

“ குறிப்பிட்ட வயதை தாண்டியவர்களுக்கு வேணுன்ன்னா வித்தியாசப்படுத்தி புரிஞ்சுக்குற பக்குவம் இருக்கும், ஆனா குழந்தைகள் தங்கள் சுற்றமும், மக்களும் எப்படி பழகுறாங்களோ அதை அப்படியே உள்வாங்கி சரியா தவறா என்று பாகுபடுத்தி பாக்காமல் கடைபிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள், அதனால், எல்லவற்றையும் குதர்க்கமாக பார்ப்பது, புரளி பேசுவது, கத்தி பேசுவது என்று செயல்படுத்துவார்கள் ( 12-18 வயது உடைய குழந்தைகள் இப்படி நடப்பது இன்று கண்கூடாக தெரிகிறது ), பெற்றோர்கள் எவ்வழியோ பிள்ளைகள் அவ்வழி, நீங்கள் பார்த்தால் உங்கள் குழந்தையும் உங்களோடு உட்கார்ந்து பார்க்கும்”

இப்படி தர்க்கம் பண்ணினாலும் , “தூற்றுவோர்கள் தூற்றட்டும்” என்று ரிமோட்டை எடுத்து கோலங்கள், அரசி என்று வரிசையாக பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்,
வறுமையும் மெகாசீரியலும் நம் நாட்டின் சாபக்கேடுகள், இரண்டையும் ஒழிக்க முடியாது என்றே தோன்றுகிறது.

1 comment:

சகாதேவன் said...

மெளலி சார்,
இப்போதெல்லாம் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை யார் வீட்டுக்கும் செல்ல நினைத்தால் அவர்கள் சீரியல் பார்த்துக் கொண்டிருப்பார்களே என்று பயமாக இருக்கிறது. அழைப்பில்லாமல் அந்த நேரத்தில் செல்வதில்லை.
சகாதேவன்t