Tuesday, November 27, 2007

கருத்த பக்ஷிகள் ( மலையாளம் )


கருத்த பக்ஷிகள்

மம்முட்டி நடித்திருக்கும் இந்த மலையாள திரைப்படத்தினை சமீபத்தில் இணையத்தில் கண்டேன் , திரைப்படம் என்ற ஊடகத்திற்கு இன்னொரு பரிமாணம் உண்டு என்பதை இப்படம் கண்ட பிறகு உணர்ந்தேன் ,மம்முட்டிக்கும் பத்மபிரியாவிற்கும் film-fare வாங்கிக் கொடுத்த படம் என்ற உந்துதலில் அந்த படத்தினை காண முற்பட்டேன், பொதுவாக திரைப்படம் என்றால் நம் மக்கள் இரண்டு வகையாக பிரிப்பார்கள், அது கமர்ஷியல்- மசாலா வகை(விஜய், விஷால் போன்றோர்களின் படங்கள்) என்றும், சீரியஸ்-பிலிம்(பாரதிராஜா, மணிரத்னம் போன்றோர்களின் படங்கள்) என்றும் பிரித்து வகைப்படுத்துவார்கள், ஆனால் இவ்விரண்டு வகையுமே ஒன்றுதான் என்றும், இவ்விரண்டு வகைகளை தாண்டி இன்னொரு வகையிலும் திரைப்படத்தினை தரலாம் என்றும் இப்படம் மூலம் கண்டு கொள்ள முடிந்தது.
மம்முட்டி ஏற்றிருக்கும் கதாப்பாதிரத்தின் பெயர் முருகன், முருகன் தமிழ்நாட்டிலிருந்து 15 வயதில் கேரளத்திற்கு வேலை தேடி புறப்பட்டவன், அவனுக்கு இஸ்திரி செய்யும் தொழில், அவனுக்கு மூன்று குழந்தைகள், அழகப்பன், மயிலம்மா மற்றும் மல்லி, இவர்களில் மல்லிக்கு பிறவியிலிருந்தே கண் தெரியாது, தினமும் பத்தோ, இருபதோ சம்பாதித்தால் தான் அவர்களுக்கு உணவே, அவனது மனைவி மூன்றாவது குழந்தை பிறந்த சில வருடங்களில் உடல்சுகவீனத்தில் மறைந்துவிட்டாள், தினமும் இஸ்திரி வண்டியை நகர்த்திக் கொண்டு அந்நகரத்தின் மேல்தட்டு மக்களின் வீட்டு வாசலில் நின்று அவர்கள் துணியை இஸ்திரி செய்து கொடுக்கும் அன்றாடங்காய்ச்சிதான் முருகன், அவர்கள் தங்கியிருப்பது ரயில் நிலையத்தின் ஓரத்தில் இருக்கும் ஒரு குடிசைப் பகுதியில் , அவன் குடிசைக்கு பக்கத்தில் இருக்கும் முதியவரின் குடும்பம்தான் அவர்களுக்கு தெரிந்த ஒரே சொந்தம், மற்றும் அதே குடிசைப் பகுதியில் வாழும் பிச்சை எடுக்கும் பெண் பூங்கொடி ( பத்மப்பிரியா ).

முதல் காட்சியில் முருகனும் மல்லியும் ஒரு கண் பரிசோதனை முகாமில் மல்லியின் கண்களை பரிசோதனை செய்து கொள்கிறார்கள், மருத்துவரும் அவளுக்கு யாராவது கண்தானம் செய்தால் கண் பார்வை திரும்ப வரும் என்று சொல்கிறார். பிறகு அவன் மூன்று குழந்தைகளையும் வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டே வந்து அந்நகர காவல் நிலையத்தில் நிறுத்தி காவலர்களின் உடுப்பிற்கு இஸ்திரி செய்து விட்டு அடுத்த வீடு நோக்கி செல்கிறான், அவன் செல்லும் பல வீடுகளில் ஒன்று தான் சுவர்ணாவின் ( மீனா ) வீடு, சுவர்ணா ஒரு வியாதியின் பிடியில் சிக்கி சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு பெண், அவளது கணவன் பம்பாயில் இருக்கிறான் , தனது கடைசி காலத்தை தன் சொந்த ஊரில் கழிக்க வந்திருப்பவள் சுவர்ணா , அவளது வீட்டில் இருக்கும் ஒரு முதியவர் ( ஜெகதி ) முருகனுக்கு பரிச்சியமானவர் , தன் இரண்டு குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல , மல்லிக்கு கண்பார்வை இல்லாத காரணத்தினால் அவளை தான் போகும் இடங்களுக்கு எல்லாம் அழைத்து போகிறான் முருகன்.
ஒரு நாள் முருகன் சுவர்ணாவின் வீட்டு வாசலில் இஸ்திரி செய்து கொண்டிருக்கும் பொழுது சுவர்ணாவின் வீட்டில் பாட்டுச் சத்தம் கேட்கிறது , அதனைக் கேட்டுக் கொண்டே உள்ளே செல்லும் மல்லியைக் கண்டு யாரென்று வினவுகிறாள் சுவர்ணா, மல்லியும் தன்னைப் பற்றி சொல்ல, சுவர்ணாவிற்கு அவளைப் பிடித்துவிடுகிறது, அன்று முதல் சுவர்ணாவிற்கு மல்லியோடு நெருக்கம் அதிகமாகிறது, இப்படி இருக்க ஒரு நாள் தெருவில் ஒருவனை ரௌடிகள் சிலர் கொலை செய்து எரிக்கிறார்கள், துரதிருஷ்டவசமாக அவன் எரிந்து கொண்டே முருகனின் இஸ்திரி வண்டியில் விழுகிறான் , தன் வண்டி எரிந்த காரணத்தினால் முருகனால் தன் இஸ்திரி தொழிலை தொடர முடியவில்லை , காவல் நிலையத்திலும், தனக்கு தெரிந்த அரசியல் பிரமுகர் வீட்டிலும் முறையிடுகிறான் முருகன், ஆனால் அவனுக்கு யாரும் உதவவில்லை.


வீட்டில் முடங்கியிருக்கும் மல்லியை பூங்கொடி தன்னோடு அழைத்துக் கொண்டு பிச்சை எடுக்கிறாள், அன்று அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது , அதனால் வீட்டிற்கு வரும் பொழுது பூங்கொடி மீன் வாங்கி மல்லியின் அக்கா மயிலம்மாவிடம் கொடுத்து சமைக்கச் சொல்கிறாள் , எப்படி மீன் வந்தது என முருகன் வினவ குழந்தைகள் உண்மையைச் சொல்கிறார்கள், கோபம் கொண்ட முருகன் தெருவில் எல்லோர் முன்பும் பூங்கொடியை அடிக்கிறான் , அவன் வராத காரணத்தினால் அவன் அன்றாடம் போகும் வீட்டிலில்லெல்லாம் இன்னொரு இஸ்திரி வண்டிக்காரனை வேலையில் அமர்த்திக் கொள்கிறார்கள் எஜமனர்கள் , தான் ஆரம்பத்தில் வேலை பார்த்த இடத்தில் இஸ்திரி செய்யும் பணியை தொடர்கிறான் முருகன், ஆனால் வருமானம் போதுமானதாக இல்லை.
இப்படியிருக்க மல்லியை காணாமல் தவிக்கும் சுவர்ணா முருகனின் குடும்பத்தை ஒரு நாள் அழைத்து வந்து சாப்பாடு போடுகிறாள் , முருகனிடம் அவன் மனைவி எவ்வாறு இறந்தாள் என வினவுகிறாள் சுவர்ணா, தீடீரென்று அவன் மனைவி முத்து லட்சுமிக்கு உடம்பில் வலி வந்ததாகவும் , அரசு ஆஸ்பத்திரியில் அவளை சேர்த்ததாகவும், இனி காப்பாற்றூவது கஷ்டம் என மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும் சொல்கிறான், அப்பொழுது அவன் மனைவி தமிழகத்தில் சிதம்பரத்தின் பக்கத்தில் புனர்ஜென்ம மலை என்று ஒன்று இருப்பதாகவும் அங்கே சென்று வந்தால் உடல் நலம் பெறும் என சொன்னதாகவும் கூறுகிறான், ஆனால் அங்கே செல்ல பணம் அதிகமாக செலவாகும் என்று இருந்த பணத்தைக் கொண்டு அவளுக்கு மருந்து வாங்கியதாகவும் சொல்கிறான், அவளுக்கு மருந்து வாங்காமல் அந்த பணத்தைக் கொண்டு அம்மலைக்கு சென்று வந்திருந்தால் அவளுக்கு குணமாகியிருக்கும் என கூறும் முருகன் தான் அப்படி செய்யாததை எண்ணி தன்னையே இழித்துப் பேசுகிறான்.
வருமானம் அதிகமாக வேண்டி ஒரு இஸ்திரி வண்டியை தினம் 50 ரூபாய்க்கு வாடகைக்கு வாங்குகிறான் முருகன், அந்த வண்டிக்கு சொந்தக்காரி அவனிடன் தினம் வாடகையை தன்னிடம் மட்டும் தரவெண்டும் என்றும் தன் குடிகார கணவனிடம் தரக் கூடாது என கூறுகிறாள், இப்படி நாட்கள் செல்ல, ஒரு நாள் சுவர்ணா தான் இறந்த பிறகு தன் கண்களை மல்லிக்கு தரப் போகிறேன் என மல்லியிடமும் முருகனிடமும் சொல்கிறாள், ஆனால் மல்லி தனக்கு அவளின் கண் வேண்டாம் என்றும் , அவள் நல்ல மனம் கொண்டவள் என்றும் அவள் வாழ்ந்தால் போதும் என்றும் கூறுகிறாள் ,முருகனும் அப்படியே கூறுகிறான், ஆனால் சுவர்ணா அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போய் தன் கண்களை மல்லிக்கு தர சம்மதம் என கையெழுத்து இடுகிறாள், முருகனும் கைநாட்டு இடுகிறான், ஆனால் சுவர்ணாவின் கணவனுக்கு இது அறவே பிடிக்க வில்லை , மல்லிக்கும் முருகனுக்கும் அன்று தூக்கம் வரவில்லை , அடுத்த நாள் சுவர்ணாவின் வீட்டிற்கு செல்கிறான் முருகன், அப்பொழுது ஊருக்கு கிளப்பும் சுவர்ணாவின் கணவன் அவனைப் பார்த்து சுவர்ணா இறந்துவிட்டாளா என பார்க்க வந்தாயா என கேட்டுவிட்டு செல்கிறான், சுவர்ணாவிடம் சென்று மல்லிக்கு அவள் கண்கள் வேண்டாம் என் எடுத்துக் கூறுகிறான், ஆனால் அவள் சம்மதிக்க வில்லை.


பிறகு ஒரு நாள் சுவர்ணா தன் வீட்டிலிருக்கும் முதியவரோடு முருகனின் குடிசைப் பகுதிக்கு வருகிறாள் , தனக்கு புனர்ஜென்ம மலையைப் பார்க்க ஆசையாக உள்ளதாக கூறி அனைவரையும் கூட்டிக் கொண்டு அம்மலைக்கு செல்கிறாள், அங்குள்ள குகைக்கு சென்று வழிபடுகிறார்கள் எல்லோரும் , பிறகு இஸ்திரி வண்டியை எடுத்துக் கொண்டு மல்லியோடு கிளம்புகிறான் முருகன், வழியில் இஸ்திரி வண்டியின் சொந்தக்காரியின் கணவன் அவனிடம் பணம் கேட்கிறான் , ஆனால் பணம் தர மறுக்கிறான் முருகன், அவனை கத்தியால் குத்திவிடுகிறான் அந்த குடிகாரன், முருகன் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான் , அங்கே அவனை யாரும் கவனிக்க வில்லை, கோபம் கொண்ட பூங்கொடி நர்ஸ்களிடம் கத்துகிறாள், உடனே முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நேரத்தில் சுவர்ணாவிற்கு ஆபரேஷன் மூலம் குணமடைய வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் பாம்பேயில் இருக்கும் ஒரு மருத்துவர், இதனைக் கேட்கும் சுவர்ணாவும் பாம்பே செல்ல ஆயத்தமாகிறாள் ,ஆனால் மல்லியை ஏமாற்றிவிட்டதாக குற்ற உணர்வு அவளை வாட்டுகிறது , மருத்துவமனைக்கு தன் வீட்டில் உள்ள முதியவரோடு செல்கிறாள் சுவர்ணா ,ஆனால் காரில் இருந்து இறங்க அவள் மனம் சம்மதிக்கவில்லை, கையில் இருக்கும் ரூபாய் நோட்டுக்கட்டை முதியவரிடத்தில் கொடுத்து முருகனிடத்தில் கொடுங்கள் என் கூறிவிட்டு சென்றுவிடுகிறாள் சுவர்ணா, மருத்துவமனையில் இதனை கேட்கும் மல்லியும் முருகனும் சந்தோஷமடைகிறார்கள், சுவர்ணா நன்றாக இருந்தால் போதும் என அந்த முதியவரிடத்தில் சொல்கிறார்கள், அவர்களிடத்தில் அந்த பணத்தை கொடுக்கிறார் முதியவர், அடுத்த நாள் முருகனும் மல்லியும் அந்த பணத்தை திரும்ப கொடுக்க சுவர்ணாவின் வீட்டிற்கு செல்கிறார்கள், ஆனால் அவள் பம்பாய்க்கு சென்றுவிட்டாள் என முதியவர் கூறுகிறார், அவரிடம் பணத்தை கொடுக்கிறான் முருகன் , அவர் வாங்கிக் கொள்ள மறுக்கிறார்.
பின் வீட்டிற்கு வரும் முருகன் அந்த பணத்தைக் கொண்டு தன் கடனை அடைக்கிறான், அடுத்த நாள் தன் பிள்ளைகளோடு தமிழகத்தில் உள்ள தன் பூர்வீக கிராமத்திற்கு செல்ல ஆயத்தமாகிறான், இருக்கும் பணத்தில் ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்வதாகவும், தன் பிள்ளைகள் கிரமாத்தில் வளர வேண்டும் என் ஆசைப்படுவதாகவும் பகக்த்துக்கு வீட்டுக்காரரிடம் சொல்கிறான், அடுத்த நாள் அவர்கள் கிளப்புகிறார்கள் , பூங்கொடி பாவமாக பார்க்க , நீயும் வருகிறாயா என கேட்கிறான் முருகன், உடனே அவளும் கிளம்புகிறாள், எல்லோரும் பேருந்து நிலையத்தை அடைகிறார்கள், அப்பொழுது சுவர்ணாவின் வீட்டிலுள்ள முதியவரிடத்தில் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டோமே என் கூறும் முருகன் அவரைக் காண சுவர்ணாவின் வீட்டிற்கு செல்கிறான், அந்த வீட்டு வாசலில் மக்கள் கூடி நிற்கிறார்கள், உள்ளே அழுகுரல்கள் கேட்கின்றன, வெளியே அம்முதியவர் நிற்கிறார், சுவர்ணா இறந்துவிட்டதாகவும், காலையில் உடல் வந்ததாகவும் கூறுகிறார், எல்லோர் முன்னிலையிலும் அவள் கணவன் மல்லிக்கு கண் கொடுக்க மறுத்ததாகவும் , ஒரு கீழ்சாதி தமிழனின் மகளுக்கு தன் மனைவியின் கண்ணைக் கொடுக்க முடியாது என் திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும் சொல்கிறார், இப்படிப்பட்ட மனிதர்கள் வாழும் உலகத்தை உன் மகள் பார்க்காமல் இருப்பதே மேல் எனவும் கூறுகிறார், பேருந்து நிலையத்திற்கு திரும்புகிறான் முருகன், எல்லோரும் பேருந்தில் ஏறுகிறார்கள், சுவர்ணாவிற்கு உடம்பு எப்படி இருக்கிறது என மல்லி கேட்கிறாள் ,அவள் நலமுடன் இருப்பதாக பொய் சொல்கிறான் முருகன் ,அதனை கேட்டு மல்லி சிரிக்கிறாள், படம் முடிகிறது!!!


ஒரு திரைப்படம் என்றால் அது சிலரது வாழ்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு என்று அர்த்தப்படுத்தினாலும் ,அதை பார்ப்பவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் பலவித சினிமாத்தனங்களை சேர்த்து கொடுப்பதே இந்திய சினிமாவின் இயல்பு. பார்ப்பவர்கள் பாவப்படவேண்டுமே என்று சில கதாப்பாத்திரங்களை மிகவும் கஷ்டப்பட வைத்து ,அழ வைத்து , நீண்ட சம்பாஷனைகளை சேர்த்து , நடிப்பவரின் ஆற்றலை வெளிக் கொணரும் விதத்தில் அந்த காட்சியைத் திரித்து எடுப்பதே இந்திய சினிமாவின் இத்தனை ஆண்டுகால பழக்கம், உதாரணத்திற்கு கமலின் படங்களை எடுத்துக் கொள்ளுங்கள், அவரின் பல படைப்புக்களில் அவரின் நடிப்பை பறைசாற்றும் விதத்தில் அந்த கதாப்பாத்திரத்தை மாற்றி, முன்னிலைப்படுத்தி, படம் பார்ப்பவர்கள் அந்த படத்தையோ கதையோ நியாபகம் வைத்துக் கொள்ள முடியாமல் தன் கதாப்பாத்திரத்தை நியாபகத்தில் வைத்துக் கொள்ளும்படி செய்திருப்பார், மிமிக்கிரி கலைஞர்களை கமல் போல் செய்யச் சொன்னால் விதம் விதமாக அழுது காட்டுவதே இதற்கு சாட்சி, ஆனால் அப்படி இல்லாமல் கதையின் போக்கில் தன் கதாப்பாத்திரத்தின் இயல்பை மாற்றாமல் நடிக்கும் சில் நடிகர்களில் மம்முட்டியும் ஒருவர், அவரை தமிழ் சினிமா பலமாக வீணடித்திருக்கிறது என்பதை இப்படத்தின் மூலம் தெரிது கொள்ள முடிந்தது .
ஒரு சினிமா என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லாவிட்டாலும், நடிப்பென்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கும் வகையில் இருந்தது இப்படம், தன் கண் முன்னால் ஒருவன் எரித்துக் கொல்லப்பட்டாலும் அதனைக் கண்டு வெகுண்டெழாமல் தன் வண்டி எரிகிறதே என பாவமாக பார்க்கும் முருகனின் இயல்பு நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது( இதே காட்சியில் கமல் இருந்திருந்தால் ஊரையே கூட்டிவைத்து அழுதிருப்பார்!!), தன் மகள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் சொல்லும் முருகனின் இயல்பும் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது, இன்றைய நவீன யுகத்தில் மனிதாபிமானத்தை நாம் முற்றிலும் இழந்துவிட்டோம் என்பதை இயல்பாக சொல்லியிருக்கிறார்கள், ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து
வழக்கமான சினிமாவாக மாறிவிடக்கூடிய அபாயம் படம் நெடுகிலும் தெரிந்தது ,ஆனால் நல்ல வேளையாக அப்படி ஆகாமல் காப்பாற்றிவிட்டார் இயக்குனர் ( இயக்குனர் பெயர் கமல்!!!) படம் நெடுகிலும் எந்த கதாப்பாத்திரமும் அழவில்லை, ஆனால் படம் முடிந்தவுடன் பார்ப்பவர்கள் கண்களில் துளி நீர் கண்டிப்பாய் வருவதே படத்தின் வெற்றி!!, ஒரு அழகான கவிதைத் தொகுப்பை வாசித்துவிட்டு வந்த உணர்வை படம் கொடுக்கிறது , இனிமேல் மலையாளப் படங்கள் பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்!.

No comments: