
ஓம் சாந்தி ஓம்
இந்த ஹிந்தி திரைப்படத்தை பார்த்தவுடன் எனக்குள் இதனைப் பற்றி ஒரு விமர்சனப் பதிவு இடவேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது, அதற்கான காரணத்தை பிறகு சொல்கிறேன், முதலில் படத்தைப் பற்றி , ஷாருக்கான் நடித்து குறுகிய கால இடைவெளியில் வந்திருக்கும் ஒரு படைப்பு, அதுவும் அவரது நெருங்கிய தோழியான பரா கான் இயக்கியுள்ள படம் ,இந்த கூட்டணி ஏற்கனவே “மேன் ஹூ நா” ( நான் இருக்கேன் இல்ல ) என்ற படத்தில் வெற்றி பெற்ற கூட்டணி, அந்த படத்தில் நகைச்சுவையை ஊறுகாயாய் தொட்டவர்கள் , இந்த படத்தில் முழுச் சாப்பாடாய் கொடுத்திருக்கிறார்கள், கதை? , அது ஒன்னும் இந்திய திரைப்படத் துறையில் முதன் முதலாய் எடுக்கப்பட்ட கதையொன்றுமில்லை, எல்லாம் நம் “நெஞ்சம் மறப்பதில்லை” கதைதான், சற்றே மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள், அவ்வளவே, படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் உங்களுக்கு புரிந்துவிடும் எப்படி என்னென்னெ திருப்பத்துடன் கதை நகருமென்று , ஆனாலும் சலிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார்கள், ஷாருக்கான் இல்லையென்றால் கண்டிப்பாய் பெரிய சரிவை சந்தித்திருக்கும் இந்த படம்!
எழுபதுகளில் ,ஒரு சினிமா ஸ்டுடியோவில் “கர்ஸ்” என்ற திரைப்படத்தின் ஷூட்டிங்கில் ஆரம்பிக்கிறது படம் ( அந்த படம் கூட இதே புனர்ஜென்மக் கதைதான்!) , ஒரு மேடையில் ரிஷிகபூர் பாடி ஆட , பார்வையாளர் கூட்டத்தில் குதிக்கும் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்தான் ‘ஓம்’ ( ஷாருக்கான்) , அவனுக்கு ஒரு சினிமா கதாநாயகனாக ஆசை, ஆனால் கிடைத்த வேஷங்களில் தலை காட்டிக் கொண்டிருக்கிறான், அவனது மனதிற்குள் இருக்கும் பெண்ணின் பெயர் ‘சாந்தி’ , அவள் வளர்ந்து வரும் ஒரு கதாநாயகி , இருவருக்குள்ளும் சில பல காட்சிகளிற்கு பிறகு நட்பு துளிர்க்கிறது, பின் ஒரு அசந்தர்ப்பத்தில் அவள் ஒரு பிரட்யூசரின் (அர்ஜுன் ராம்பால் ) காதலி என்பதும் ,அவள் கர்ப்பம் என்பதும் தெரிய வருகிறது ஓமிற்கு, தன் எதிர்காலம் கருதி அவளை தீர்த்து கட்டுகிறான் அந்த ப்ரொடியூசர், அவளை காப்பாற்ற நினைக்கும் ஓமையும் கொல்கிறார்க்ள் அவன் ஆட்கள், அதே கணத்தில் ஒரு முன்னணி கதாநாயகனுக்கு குழந்தை பிறக்க, அந்த குழந்தைதான் புனர்ஜென்மத்தில் பிறக்கும் ஓம், மறு ஜென்மத்தில் எப்படி அவன் வில்லனை பழிவாங்குகிறான் என்பதை வழக்கம் போல் மசாலா தடவி முடித்திருக்கிறார்கள்.
என்ன இருக்கிறது இந்த படத்தில் ? எதற்கு ஷாருக்கான் “ஷக் தே இந்தியா”விற்கு பிறகு இப்படி ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார் என்பது பலருக்கும் எழும் ஒரு கேள்வி. ஆனால் படத்தில் எங்கும் நிரம்பியிருக்கும் ஒரு விஷயம்தான் படத்தை காப்பாற்றி வெற்றி பெறவைத்திருக்கிறது, அது ‘நகைச்சுவை’, ஷாருக்கான் இதுவரை நடித்த படங்களிலேயே இதுதான் நகைச்சுவைக்கு பிரதானமான படைப்பு , நவரசங்களில் அதுவும் ஒன்றுதானே, அதையும் தொட்டுப் பார்த்திருக்கிறார், நகைச்சுவையில் பலவிதங்கள் இருந்தாலும் இது ‘பரோடி’ எனப்படும் நையாண்டி வகையை சார்ந்தது, அதாவது கிட்டத்தட்ட நம் ‘லொல்லு சபா’ மாதிரி ஒரு வகை ‘சட்டையர்’ திரைப்படம், இந்த காரணம்தான் இந்த விமர்சனம் எழுத என்னைத் தூண்டியது .ஆங்கிலத்தில் வந்திருக்கும் ‘scary movie 1,2,3,4’ படங்களை பார்த்தவர்களுக்கு அதன் சாரம் தெரிந்திருக்கும், தமிழில் அப்படி ஒரு படம் துரதிருஷ்ட வசமாக வந்ததில்லை (இம்சை அரசன் அந்த வகைதான் என்றாலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அது நன்றாக வந்திருக்கும் என்பது என் கருத்து).
எழுபதுகளில் உள்ள பாலிவுட் சமாச்சாரங்களை காட்சிக்கு காட்சி நக்கலடித்திருக்கிறார்கள் , அதுவும் போதாக் குறைக்கு நாயகியை கவர, ஓம் ஒரு தமிழ் படத்தில் நடிக்கும் கதாநாயகன் என செட்டப் செய்து ஒரு டூப் ஷூட்டிங்கை ஏற்பாடு செய்து நடித்திருக்கும் காட்சியில் வயிறை புண்ணாக்கிவிட்டார்கள் ( சத்தியமாய் நான் சிரித்து சிரித்து விழப் போய்விட்டேன் திரை அரங்கில்!!), தமிழ் திரைப்படம் அந்த காலத்தில் இப்படி இருந்தது என்பது ஒரு தமிழனாக எனக்கு சங்கடத்தை கொடுத்தாலும் அதை விட ஒரு சங்கடம் நாம் இன்னமும் அப்படித்தான் படம் எடுக்கிறோம் என்பதை நினைக்கும்பொழுது எனக்கு ஏற்பட்டது!, ஆனால் சமயோஜிதமாக அக்கால ஹிந்தி திரைப்பட நாயகர்களின் பரோடியை நாசூக்காக தவிர்த்திருக்கிறார்கள் ( அந்த காலத்து நாயகர்கள் இன்னமும் திரைத்துறையில் இருப்பதினாலோ என்னவோ!).
சரி முதல் பாதியில் கலாய்த்தவர்கள், பின் பாதியில் சீரியசாக கொண்டு போவார்கள் என்று பார்த்தால் , தற்காலத்தில் உள்ள நடிகர்களை அவர்களை வைத்தே கிண்டலடித்திருக்கிறார்கள்!, Film-fare awards நிகழ்ச்சியில் ஷாருக்கான்( ஓம் கபூராக ) நடித்திருக்கும் படங்களாக “phir bhi dil hai NRI” என்றும், “Main bhi hoon na” என்றும் அவரது முந்தய படங்களை நக்கலடித்திருக்கிறார்கள், அதுவும் இரண்டு படத்திலும் அவருக்கு ராகுல் என்ற பெயர்!!!, மேலும் அபிஷேக் நடித்ததாக “dhoom 5” மற்றும் அக்ஷய் நடித்ததாக “khiladi returns” என்று கலாய்க்கிறார்கள், ஓம் அந்த நிகழ்ச்சியில் விருது வாங்க , அபிஷேக் மற்றும் அக்ஷயின் ரியாக்ஷன் நம்மை சிரிப்பில் ஆழ்த்துகிறது, பின் அந்த இரவில் கிட்டத்தட்ட பாலிவுட நட்சத்திரங்கள் அனைவரும் ஒரு பாட்டிற்கு ஆடுகிறார்கள் (கிட்டத்தட்ட 31 பேர்!!!) , அனில் கபூர், கரினா கபூர்,ஷாயித் கபூர், ஸ்ரீதேவி, அமிதாப் குடும்பம், அமிர்கான் , ஜான் ஆபிரகாம் , இவர்களைத் தவிர மற்ற அனைத்து பாலிவிட் முன்னாள் ,இந்நாள் நாயக நாயகியர் அனைவரும் ஆடுகிறார்கள் , எல்லோரும் ஷாருக்கானிற்காக ஒத்துக் கொண்டிருப்பார்கள் போல !,ஓம் எடுக்கும் திரைப்படத்தில் கதாநாயகிக்காக ஒரு தேர்வு நடத்தி எல்லா பெண்களையும் அட்சர சுத்தமான ஹிந்தி டயலாக் கொடுத்து பேசச் சொல்லும் காட்சியிலும் நகைச்சுவை இழையோடுகிறது, இப்படி சினிமாத் துறையை நக்கலடித்திருக்கும் ஒரு சினிமாதான் ‘ஓம் சாந்தி ஓம்’ , உண்மையிலேயே நினைத்து நினைத்து சிரிக்கும் காட்சிகளைக் கொண்ட திரைப்படம் இது, இனிமேல் ஷாருக்கான் இப்படிப்பட்ட படத்தில் நடிப்பார் என்பது சந்தேகமே, ஆனால் அவருக்கு நவரசங்களில் நகைச்சுவை நன்றாக வருகிறது , தமிழில் கமலைத் தவிர யாரும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை தர தயங்குகிறார்கள், இந்த படத்தைப் பார்த்து சற்று முயற்சி செய்யலாம் யாராவது , செய்வார்களா?
ஷாருக்கானின் தமிழ் பட spoof காட்சி,
1 comment:
//அவளை காப்பாற்ற நினைக்கும் ஓமையும் கொல்கிறார்க்ள் அவன் ஆட்கள், அதே கணத்தில் ஒரு முன்னணி கதாநாயகனுக்கு குழந்தை பிறக்க, அந்த குழந்தைதான் புனர்ஜென்மத்தில் பிறக்கும் ஓம், மறு ஜென்மத்தில் எப்படி அவன் வில்லனை பழிவாங்குகிறான்//
நண்பரே!
தீயினில் இருந்து வெளியே வீசப்பட்டு விழும் ஓம முன்னணி கதாநாயகனின் Star இலக்க தகடுடைய காரின் முன்னால் விழுவதை கவனிக்க தவறிவிட்டீர்கள் போலுள்ளது...
அதிர்ச்சியில் சில விடையங்கள் மறக்கிறது..
புனர்ஜென்மம் இல்லை..
இரவு பார்ட்டியில் வெளிஊரிலிருந்து வரும் வில்லனை கண்ணபின் ஓம் பழைய நினைவுகளை மீளபெறுகிறார்.
Post a Comment